மினசோட்டாவில் சித்திரை தமிழிசை விழா

 

வட அமெரிக்காவில் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் சுமார் 3000 தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மினசோட்டாத் தமிழ்ச் சங்கம், தனது சங்கம் ஆரம்பித்த பத்தாவது ஆண்டை கடந்த பொங்கல் விழாவில் சிறப்பாகக் கொண்டாடியது. கடந்த ஆண்டு தமிழ் மொழிக்கான நான்கு நாள் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டை முதல் முறையாக மினசோட்டாவில் நடத்திக் காட்டியதும் இந்தத் தமிழ்ச்சங்கம் தான்.

பனிக்காலம் முடிந்தும், வசந்த காலத் தொடக்கமுமான ஏப்ரல் மாத இறுதியிலும், தமிழ் மாதமான சித்திரையில் ஒரு இசை விழா 29 தியதியில் நடத்தப் போவதாக ஒரு அழைப்பு வந்தது. அதுவும் தமிழிசை, மக்களிசை, திரையிசையை ஒரே இடத்தில் கேட்க வாய்ப்புக் கிடைத்தால் யாருக்குத்தான் விட்டு விட மனம் வரும். தமிழகத்தின்  பட்டி தொட்டி முதல் நகர்புறங்களிலும் தெரிந்த, புகழ் பெற்ற கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவியுமான திருமதி.அனிதா குப்புசாமி அவர்களின் இசைக்குழுவினர் தான் வருகிறார்கள் என்றால் போகாமல் எப்படி தவிர்க்க முடியும்.

29 ஆம் தியதி மாலை விழாவானது குழந்தைகள் பங்கு கொண்ட மலரும் மொட்டும் நிகழ்ச்சியில் இருந்து தொடங்கியது. குழந்தைகள் ஒவ்வொருவரும் மாறுவேடமிட்டு அழகாக இருக்கையில் அமர திருமதி.அனிதா குப்புசாமி ஒவ்வொருவராக அழைக்க, குழந்தைகள் அனைவரும் மழலைத் தமிழில் தாங்கள் வேடமிட்டதை அழகாகச் சொல்லி அரங்கில் கைத்தட்டலை அள்ளிச் சென்றனர். விவசாயியாக, பாரதியாக, தமிழ்த் தாயாக, அம்பேத்காராக, மாம்பழமாக, வண்ண பலுன் உடையுடனும், மேலும் பல கண்கவர் உடைகளிலும் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளும் பார்வையாளர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டனர்.

இசை நிகழ்ச்சியானது “தமிழே உயிரே வணக்கம்” என்ற தமிழ் வாழ்த்துப் பாடலுடன் திரு.புஷ்பவன் குப்புசாமி அவர்களின் வெண்கலக்குரலுடன் ஆரம்பமானது. கிராமிய கும்மி பாடல், காதல் பாடல், தத்துவப்பாடல்,  தமிழிசைப் பாடல், தெய்வப்பாடல்கள் என்று பல பரிமாணப் பாடல்களைப் பாடிச்சென்று, அனைவரும் பதில் அளிக்கக்கூடிய வகையில் விடுகதைப் பாடல்களும், குழந்தைகள் ஆட்டம் போட்டு மகிழும் வகையில் குழந்தைப்பாடல்களையும் விட்டு வைக்கவில்லை. அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் தனது இருக்கையை விட்டு எழுந்து ஆட்டம் போடும் வகையில் தமிழ் இசையும், பாடலும் கட்டிப்போட்டது என்பதே உண்மை. ஒவ்வொரு பாடலின் ஊடேயும் அந்த பாடலின் சிறப்பையும், தமிழ்ப் பண்களின் பெயரினையும் தற்போதைய பெயரினையும் ஒப்பிட்டு, இசையை குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் வழி என்று பல தகவல்களை கூறியது சிறப்பு. அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்த குழந்தைகள் எங்கே இந்தக் கிராமியப் பாடல்களைக் கேட்கப்போகிறாங்கனு என்ற பொதுவான கருத்தெல்லாம் இந்த விழாவில்  தவிடுபொடியானதைக் காண முடிந்தது.

மினசோட்டாத் தமிழ்ப் பள்ளியில் வார இறுதியில் தன்னார்வல பணி செய்பவர்களில் ஒன்பது ஆசிரியர்கள், தமிழியல் பட்டத்தினை திரு.புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் வழங்க, பெற்றுக்கொண்டனர். இந்தப் பட்டமானது இவர்கள் மினசோட்டாவிலிருந்தபடியே தமிழ்ப் பட்டப்படிப்பைக் கற்று, தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றதற்கு தஞ்சைப் பல்கலைக்கழகம் வழங்கியது என்பது அனைவருக்கும் வியப்பை   ஏற்படுத்தியது.

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பல விழாக்களில் தமிழர் கலையையும் மரபு சார்ந்த நிகழ்வுகளையும் தொடர்ந்து நடத்திவருகிறது. ஆனால் இந்த சித்திரை இசை நிகழ்ச்சியானது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ரசிக்க வைத்தது என்றால் மிகையல்ல.

இந்த விழாவை சிறப்புடன் நடத்திய மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் முத்தாய்ப்பாக, சங்கக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மேடையேறி,  திரு.புஷ்பவனம்  குப்புசாமி அவர்களுக்கு “தமிழிசை வேந்தர்” என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கி, தலைப்பாகை ஒன்றை சூட்டி அழகு பார்த்தது. இந்தப் பட்டத்தை அறிவித்தவுடன் அரங்கத்தில் கரவொலி அடங்க வெகு நேரமானது.

திருமதி.அனிதா குப்புசாமிக்கு “மக்களிசை குயில்” என்ற பட்டத்தையும் வழங்கிப் பெருமைப் படுத்தியது. திருமதி.அனிதா குப்புசாமி கண்கள் கலங்கவும், இருவரும் நெகிழ்சசியோடு மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் வழங்கிய இந்த அங்கிகாரத்தை கூறி நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த, மிகச்சிறந்த வீணையிசைக் கலைஞரும், பாடகருமான திருமதி நிர்மலா ராஜசேகர் மற்றும் கொடையாளரும், முனைவருமான திரு. தாஸ் அவர்களும், இருவரையும் வாழ்த்தினர்.

ஒரு நிறைவான இசை விழாவைக் கண்டு களித்த மகிழ்வோடு அனைவரும், நிகழ்ச்சியை நடத்திய மினசோட்டாத் தமிழ்ச்சங்க குழுவினருக்கு நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

– வழிப்போக்கன்